திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை நிகழ்ச்சி கோலாகலம்..! - thyagaraja swami Aradhana
Sri Thyagaraja Swami Aradhana: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.


Published : Jan 30, 2024, 3:01 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
திருவையாற்றில் உள்ள ஸ்ரீதியாகபிரம்ம சபா சார்பில் ஆண்டுதோறும் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் தியாகராஜரின் 177வது ஆராதனை விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கி தினமும் பல்வேறு இசைக் கலைஞர்களின் இசைக்கச்சேரி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி செலுத்தும் விழா இன்று (ஜன.30) நடைபெற்றது. புல்லாங்குழல் கலைஞர்கள் வாசிக்கும் கீர்த்தனையுடன் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகங்களைப் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டார். இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஒ.எஸ்.அருண், ஏ.கே.பழனிவேல் என ஏராளமானோர் கலந்து கொண்டு இசை அஞ்சலி பாடினர். முன்னதாக தியாகராஜர் உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனையும் நடைபெற்றது.