சென்னை: சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று (ஜூன் 28) ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' அறிமுகம் செய்யப்பட்டது. புத்தக அறிமுகப் பிரதியை இயக்குநரும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டார். அதனை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.முரளி பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் மரபின்மைந்தன் முத்தையா மற்றும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்குபெற்று புத்தகம் குறித்த சிறப்புரையை வழங்கினர். மேலும், புத்தகம் குறித்த கருத்துக்களை பங்கேற்பாளர்களிடம் எடுத்துக் கூறினர். அதில் சத்குரு இந்த புத்தகத்தின் மூலம் கூற வரும் கருத்துகளாக கர்மா என்றால் என்ன என்பதையும், நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் குறித்து விவரித்தனர்.
மேலும், இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு படிப்படியான வழிகாட்டுதல்களை சத்குரு சூத்திரங்களாக வழங்கி இருப்பதாக கூறினர். இந்த புத்தகம் முதலில் 2021ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த நிலையில், இதுவரை பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதுவரை ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசானில் இந்த புத்தகம் சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங் பெற்று, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் NEWYORK BEST SELLER லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. மேலும், இந்த புத்தகத்தை 25-க்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது. இவ்வாறு உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது தமிழ் வாசகர்கள், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இளையராஜா இசையில் உருவான திவ்ய பாசுரங்கள் வெளியீடு; ஆன்மீக அன்பர்களுக்கு விருந்து!