தூத்துக்குடி: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று(பிப்.14) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாட்களை கடைப்பிடித்து வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டும் தவக்காலம் சாம்பல் புதனான இன்று தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை நிறைவேற்றினார்.
கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை இட்டு அடையாளம் வரையப்பட்டு தவக்காலம் தொடங்கியது. இதேபோல் தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள், சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து வரும் பிப்.16ஆம் தேதி திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவைகளும் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 28ஆம் தேதி புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், புனித வியாழனன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைத் தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை சடங்குகளும் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்...சபாநாயகர் அப்பாவு உத்தரவு!