சென்னை: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள், குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் தலைமை முகவர், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்று அதன் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடில் அதிக வாக்குகள் பெற்று திமுக வெற்றி பெறும் தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் அமையும். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடுநிலைமையுடன் நேர்மையுடன் நடந்து கொள்கின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். மோடி பலமுறை தமிழ்நாடு வந்துள்ளார். பலமுறை பார்த்திருப்போம், ஆனால் தற்போது அவர் முகத்தில் தோல்வியின் பயம் தெரிகிறது.
தோல்வி பயத்தால் மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களைப் பற்றி இழிவாகப் பேசி கலவரத்தை தூண்டி தேர்தலை நிறுத்தப் பார்க்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது. மோடியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். தினம்தினம் மாற்றி பேசுபவர் தான் மோடி. சுதந்திர இந்திய வரலாற்றில், இதுவரை இப்படி ஒரு பிரதமரை நாங்கள் பார்க்கவில்லை.
உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற பகுதிகளில் பாஜக கடந்த தேர்தலை விட குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும். சுமார் 116 முதல் 150 இடங்களில் மட்டுமே பாஜக கைப்பற்றும். இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெல்லும். பாஜக கூட்டணி எத்தனை இடத்தில் டெபாசிட் பெறப் போகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நான்கு கோடி ரூபாய் விவகாரத்தில் அமலாக்கத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இதோடு குறைந்த அளவு பணம் கொண்ட செந்தில் பாலாஜி வழக்கில் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜூன் 6-க்குப் பின்பு முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரியின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.