கரூர்: தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மாலை நேரத்தில் துவங்கி, இரவு 11 மணி வரை தரைக்கடை வியாபாரிகள் குறைந்த விலையில் ஆடைகளை விற்பனை செய்வதால் அதனை வாங்குவதற்கு என்று கூட்டம் கூட்டமாக கரூர் நகர் பகுதியை நோக்கி பொதுமக்கள் படையெடுக்க துவங்குவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், கரூர் கடை வீதியைச் சுற்றி அமைக்கப்படும் இந்த தற்காலிக தரைக்கடைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடைகள் விற்பனை பாதிப்பதாக தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதனால் கடந்த மூன்று நாட்களாக தற்காலிக தரைக்கடை வியாபாரிகள் கடைகள் அமைப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்து, கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி மறுத்து வந்தனர். இந்நிலையில், கரூர் ஜவகர் பஜார் கடைவீதி மற்றும் பசுபதீஸ்வரர் கோயில் வளாகத்தைச் சுற்றி ஏராளமான தற்காலிக தரைக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்தது.
அப்போது, கரூர் மாநகராட்சியில் டெண்டர் எடுத்திருப்பதாகக் கூறி, சிலர் கடை ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் தினமும் வழங்க வேண்டும் என வசூல் செய்து வருவதாக தற்காலிக தரைக்கடை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கடை அமைக்க விடுவதில்லை என்றும் கூறி தற்காலிக தரைக்கடை வியாபாரிகள் கரூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையும் படிங்க: "கொலை செய்யட்டும்.. முழு செலவையும் நாம பாத்துக்கலாம்" - ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடி நாகேந்திரன் அளித்த பகீர் வாக்குமூலம்!
இது குறித்து தற்காலிக தரைக்கடை வியாபாரிகள் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், “கடந்த 20 ஆண்டுகளாக இது போன்று நடக்கவில்லை. இப்போது கடை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர். கடை அமைத்தால் தான் எங்களுக்கு சாப்பாடு. லட்சம் மற்றும் ஆயிரம் ரூபாய் கணக்கில் கடன் வாங்கி வியாபாரம் செய்கிறோம். இதற்கு அனுமதிக்கவில்லை என்றால், எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அது மட்டுமல்லாமல், சுங்க வரி என்ற பெயரில் கடை அமைப்பதற்கு நாளொன்றுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை கேட்கின்றனர்.
இங்கு உள்ளூர் சில்லரை வியாபாரிகள் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, கரூரில் இரவு முழுவதும் தங்கி வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி விற்பனையை நம்பி சில்லறை வியாபாரிகள் கடன் வாங்கி கடை அமைக்கத் தயாராகி வந்தனர். அவர்களைத் தடுக்கும் விதமாக, காவல் துறையை வைத்து அச்சுறுத்தி வருகின்றனர். கடை அமைக்க அனுமதி மறுத்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர்.
மைசூரைச் சேர்ந்த பிரகாஷ் கூறுகையில், “20 ஆண்டுகளாக கரூரில் கடைகள் அமைப்பதற்கு இது போன்ற இடையூறுகள் செய்யப்படவில்லை. கடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையைக் கொடுக்கவில்லை எனில், அச்சுறுத்தும் வகையில் ஆபாசமான வார்த்தைகளில் பேசுகின்றனர்” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்