சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி மற்றும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 3 ஆயிரத்து 638 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கான பட்டங்களையும், பதக்கங்களையும் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி வழங்கினார். மேலும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய கூடைப்பந்து அணி தலைவர் பத்மஸ்ரீ அனிதா பால்துரை கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், "திருநெல்வேலி சிறிய கிராமத்தில் இருந்து சென்னையில் வந்து குடியேறி சிறிய பள்ளியில் படித்தேன். எனது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் கூடைப்பந்து போட்டியில் சேர்த்து விட்டனர். அதனைத் தொடர்ந்து மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்றேன்.
அதன் பின்னர் தமிழ்நாடு அணியில் விளையாடினேன். 10 வயதில் 13 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கான பிரிவிலும், 11 வயதில் 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரிவில் தேர்வுச் செய்யப்பட்டேன். 13 வயதில் 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவிலும், 14 வயதில் 18 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு அணியில் தேர்வுச் செய்யப்பட்டு, விளையாடினேன். இந்திய அணியிலும் விளையாடினேன். 8 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாடு அணிக்காக விளையாடினேன்.
இதையும் படிங்க: “Let's wait and see”.. பவன் கல்யாண் பேச்சுக்கு உதயநிதி பதில்!
19 வயதில் கேப்டன் பொறுப்பை அளித்தனர். எனது விளையாட்டு வாழ்க்கை சிறப்பாக சென்றுக் கொண்டு இருந்தது. ரயில்வேயில் பணியில் சேர்ந்தேன். விளையாட்டில் தோல்விகள் நிறைய இருக்கும். அது வெற்றியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தது.
3 முறை அறுவை சிகிச்சை செய்தப்போதும் எழுந்துள்ளேன். திருமணம் செய்தப் பின்னர் குழந்தைப் பிறந்தப் பிறகு 8 மாதத்திற்கும் பின்னர் ஏசியன் விளையாட்டில் நாட்டிற்காக விளையாடி தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை அளித்தனர்.
எனது விளையாட்டு வாழ்க்கையில் ஏற்பட்ட காயம், பொருளாதாரம், போன்ற பிரச்சனைகளை எதிர்க்கொண்டு சவால்களை சாதித்தேன். தற்போது தமிழ்நாடு விளையாட்டு துறையின் மையமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு விளையாட்டு துறையில் பலமடங்கு முன்னேறியுள்ளது.
விளையாட்டுத் துறையில் பல மாறுதல்கள்களை ஏற்படுத்துவதோடு, வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். மத்திய மாநில அரசுகள் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்களாக பணிக்கு செல்லும் நீங்கள் மாணவர்களுக்கு விளையாட்டு உடன் ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் சுந்தர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்