தூத்துக்குடி: கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2017ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், கோவில்பட்டி மேல இலைந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த பலவேசம் மகன் சுப்பிரமணியன் (எ) பாலசுப்பிரமணியன் (45) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கை அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லபாய் புலன் விசாரணை செய்து, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்.20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை நேற்று (திங்கட்கிழமை) விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றவாளியான சுப்பிரமணியம் என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேபோன்று, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு 10 வயது மற்றும் 8 வயது சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், சாத்தான்குளம் சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜான்ராஜ் (57) என்பவரை, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கை, அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி புலன் விசாரணை செய்து, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றவாளியான ஜான்ராஜ் என்பவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: நடுவானில் மோதிய ஹெலிகாப்டர்கள்.. மலேசியாவில் 10 பேர் உயிரிழப்பு.. தீயாய் பரவும் வீடியோ! - Malaysia Helicopter Crash