கரூர்: கரூர், தெற்கு காந்தி கிராமம், கம்பன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் - சுந்தரவள்ளி தம்பதி. இவர்களது மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு ஜீவா விடுமுறைக்காக ஊருக்கு வந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் தேதி மகனை காணவில்லை என தாய் சுந்தரவள்ளி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை 27ஆம் தேதி தொழிற்பேட்டை சிட்கோ தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள கைவிடப்பட்ட பாழடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முட்புதரில், ஜீவாவை கொலை செய்து புதைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
அதன் பேரில், கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று, கரூர் வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில், தாந்தோணிமலை போலீசார் ஜீவாவின் சடலத்தை தோண்டி எடுத்தனர். கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஜீவாவின் உடலை தோண்டி எடுக்கும் போது கை, கால்கள், உடல் என ஆறு துண்டுகளாக வெட்டி புதைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டவர்கள் அதிர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் கரூர் நகர காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
கொலைப் பின்னணி: இந்த விசாரணையில், கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த தர்மா என்ற கிருஷ்ணசாமி, காந்தி கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சசிகுமார் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து மது அருந்த திட்டமிட்டு ஜீவாவை மது வாங்கி வர கூறியுள்ளனர். மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென மோகன்ராஜ் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மோகன்ராஜ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சசிகுமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார். இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் 2021ஆம் ஆண்டு பிரேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மோகன்குமார் மற்றும் சசிகுமார் அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் தர்மா என்ற கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று இன்னும் இரு தினங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. இது தொடர்பாக சசிகுமார் இறந்து போன நண்பன் மோகன்ராஜ் சாவுக்கு தர்மா தான் காரணம் என்று நினைத்து வந்த நிலையில், தர்மாவுக்கு மது பாட்டில் வாங்கி வந்த ஜீவா தான், மதுவில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்துள்ளது.
கனவில் வந்த நண்பன்: இதனால் நண்பனின் சாவுக்கு காரணமான ஜீவாவை பழி தீர்க்குமாறு, சசிகுமாருக்கு நீண்ட நாட்களாக மோகன்ராஜ் கனவில் வந்து கூறியதாக வாக்குமூலத்தில் சசிகுமார் கூறியுள்ளார். இதற்கான நேரத்தை பார்த்து காத்திருந்துள்ளார் சசிகுமார். இந்நிலையில் தான், கடந்த ஜூலை 22ஆம் தேதி திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜீவா கரூர் காந்திகிராமம் திரும்பி உள்ளார்.
ஜீவாவின் நண்பர்கள் பாண்டீஸ்வரன் உள்ளிட்ட சிலர் மது அருந்துவதற்காக தொழிற்பேட்டை அருகே உள்ள பாழடைந்த பயன்படுத்த கட்டிடம் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள், ஜீவாவை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
பிறகு ஜீவாவின் உடலை, மோகன்ராஜ் மது அருந்தி உயிரிழந்த இடத்தில் ஏழு துண்டுகளாக வெட்டி புதைத்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் காந்திகிராமம் பகுதியில் வசிக்கும் ஜீவாவின் நண்பன் பாண்டீஸ்வரன் (20), மதன் கார்க்கி (21), சுதாகர் (21), அருண்குமார் (20), மதன் (21) ஆர்யா என்ற ஹரி (20), ஹரிபிரசாத் (20), சசிகுமார் ஆகிய 8 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சந்துரு, கபில்குமார் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்
இதையும் படிங்க: காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்.. நெஞ்சை பிசையும் சோகம்.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன?