திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், துரைசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் வயது (84). இவர் கடந்த 41 ஆண்டுகளாக தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். கடைசியாக, குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் குனிச்சி பகுதியில் உள்ளது. இதனைப் பார்பதற்காக வந்த அவர், திருப்பத்தூர் - தருமபுரி செல்லும் வழியில் குனிச்சி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் - தருமபுரி செல்லும் குனிச்சி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சுற்று சுவரின் தடுப்பு சிறியதாக உள்ளதால் இதுவரை நான்கு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதன் தடுப்புகளை இரும்பு கம்பிகள் கொண்டு பெரிதாக வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடோனில் சிக்கிய 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் !- தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் - Meensurutty Tobacco hoarding