கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள பகுதி கருணாபுரம். கடந்த ஜூன் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் கூட அறிந்திருக்காத இவ்வூர், இப்போது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
காரணம் கள்ளச்சாராயம். சாராயம் குடித்து ஒருவர், இருவர் பலியாகி இருப்பதை தான் இதுவரை கேள்விபட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு ஊரே பலியாகி உள்ளது. சுனாமி அலை ஊரையே பலி கொள்வது போல, இங்கு கள்ளச் சாராய அலை கருணாபுரத்தையே பலி கொண்டுவிட்டது. ஊரே சுடுகாடானது. உயிரிழந்த பலரின் உடல்களும் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்ட நிகழ்வு கள்ளக்குறிச்சியை மட்டுமல்லாமல் தமிழகத்தையே கண்ணீரில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், சோக கடலில் மூழ்கி கிடக்கும் கருணாபுரத்திற்கு ஈடிவி பாரத் சார்பில் நமது செய்தியாளர் ரவிச்சந்திரன் அங்கு சென்றார். எங்கு பார்த்தாலும் கணவனை இழந்த மனைவிகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் என அழுது அழுது வற்றிய கண்ணீருடன் இருந்ததை கனத்த இதயத்துடன் பார்க்க முடிந்தது.
“ஏன் இவர்கள் இறந்தார்கள்... சாமானிய மக்களான இவர்கள் சாராயம் குடித்து தானே இறந்தார்கள். 'குடி குடியை கெடுக்கும்' என்று தெரிந்து தானே குடித்து இப்போது இறந்தார்கள்” என சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், வயிற்று வலியால் தவித்து வந்த தாய், அப்பா வாங்கி வைத்திருந்த சாராயத்தை ஓம வாட்டர் என நினைத்து பருகி, உயிர் பிரிந்தார் என நீங்கா துயருடன் அந்த 16 வயது சிறுமி கூறியது நெஞ்சத்தை பதற வைக்கிறது.
பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சிறுமி நம்மிடம் பேசியபோது, என் அப்பா சுரேஷிற்கு வலது கை இல்லை. ஒரே கையில் வேலை செய்து ஏற்படும் அலுப்பு காரணமாக அடிக்கடி மது குடிப்பார். என் தாய் வடிவுகரசிக்கு குடிப்பழக்கம் கிடையாது. சம்பவத்தன்று அப்பா இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கி வந்து, ஒன்றை குடித்துவிட்டு மற்றொன்றை டம்ளரில் ஊற்றி வைத்திருந்தார். அந்நேரம் பாட்டியின் அழைப்பு வந்ததும், அதை அப்படியே வைத்துவிட்டு பாட்டி வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதனிடையே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அம்மா, என்னிடம் ஓம வாட்டர் வாங்கி வரும்படி கூறினார். நான் ஓம வாட்டர் வாங்கி வந்து வீட்டினுள் வைத்துள்ளேன் என்று அம்மாவிடம் கூறிவிட்டு, பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டேன். அப்போது டம்ளரில் உள்ள சாராயம் தான் ஓமவாட்டர் என்று நினைத்து, அதை குடித்து, அப்பாவுடன் அவளும் உயிரிழந்துவிட்டார்” என உருக்கமாக கூறினார்.
'சொந்த வீடு வேண்டும்': வழக்கறிஞர், திரைப்பட இயக்குநர் என வெவ்வேறு கனவுகளுடன் இருக்கும் தம்பிகளுடன் அமர்ந்திருந்த அந்த சிறுமி, தனக்கும் 9 மற்றும் 10 ஆம் படிக்கும் எனது தம்பிகளுக்கும் 18 வயது வரை மாதாமாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், தங்களின் கல்வி கட்டணத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாகவும் அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார். மேலும், சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் தனது குடும்பத்திற்கு அரசு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று நமது ஈடிவி பாரத் மூலம் அரசிற்கு சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: மேலும் மூவர் கைது! - Kallakurichi Illicit Liquor Case