காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.எஸ்.எஸ்.சாந்தகுமார். இவர் அப்பகுதி 15வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு, வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் PPG.சங்கர் என்பவரைக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சாந்தகுமார் 1 வருடச் சிறைத் தண்டனைக்குப் பிறகு, சமீபத்தில், சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில், வேறொரு கொலை வழக்கிற்காக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், போலீசார் சாந்தகுமாரைப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், காவலர்கள் தாக்கியதால் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரனை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது திட்டமிட்ட படுகொலை எனக் கூறி, சாந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒரு வாரத்திற்கு மேலாகியும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உயிரிழப்புக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்தியக் குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் சூசை, உயிரிழந்த நபரின் மனைவியுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
உயிரிழந்த சாந்தகுமார் ரவுடிகள் மற்றும் போலீசாரால் உயிருக்கு ஆபத்து உள்ளது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடிதம் மூலமாகத் தெரிவித்தும் எந்தவிதப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதைப் புகாரில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆவடி காவல் ஆணையாளரைச் சந்தித்து, எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறுவதால் நாங்கள் காத்திருக்கிறோம். அந்த அறிக்கை பெறப்பட்டதும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உடற்கூறாய்வு அறிக்கையில், தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. சாந்தகுமாருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்கான உதவியை அரசு செய்து தர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: இந்திய ரசிகர்கள் பார்க்காத ஒன்று ‘கோட்’ படத்தில் உள்ளது.. இயக்குநர் வெங்கட் பிரபு மாஸ்கோவில் பேட்டி! - Venkat Prabhu About GOAT