மதுரை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரையில், நாளை மறுநாள் (ஏப்.17) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலெட்சுமி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், கடந்த 2011ஆம் ஆண்டு வாக்களர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக காவல் துறையினரால் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டுமென மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு காவல்துறை தரப்பில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2019இல் 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் 1,733 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 2021ஆம் ஆண்டில் 8,655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1,414 வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிப்பதகாக் கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.