கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் - துர்கா (26) தம்பதி. துர்கா இரண்டாவது பிரசவத்திற்காக புளியம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே துர்காவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், துர்காவிற்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய அவரது கணவர் மருத்துவரை அணுகி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, துர்காவிற்கு புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்தபோது, அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று (ஏப்.25) காலை துர்கா உயிரிழந்துள்ளார். துர்காவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துர்காவிற்கு எந்தவிதமான உடல் பரிசோதனையும் செய்யாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்ததாகவும், குடும்பக் கட்டுப்பாடு செய்ததால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் மட்டும் செவிலியர்களிடம் கேட்ட போது, எந்த விதமான பதிலளிக்கவில்லை எனவும், இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டி வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது! - Petrol Bomb At The Lawyer House