புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவரங்குளம் வனப்பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைச்சாமி என்பவர் கூட்டாளிகளுடன் வனப்பகுதியில் பதுங்கி இருந்ததாகவும், அவர்களைப் பிடிக்க முயன்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு கத்தியால் ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை வெட்டியதாகவும், அதனால் துரைச்சாமியை சுட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரவுடி துரைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, திருச்சி சரக டிஐஜி மனோகரன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தீதா பாண்டே உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ரவுடி துரைச்சாமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போது, புதுக்கோட்டையில் ரவுடி துரைச்சாமி என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், திருவரங்குளம் காட்டுப்பகுதியில் ரவுடி துரைச்சாமி பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரை ரவுடி அரிவாளால் தாக்கிய காரணத்தால், தற்காப்புக்காக என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது முற்றிலும் தவறானது என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவமனையில் ரவுடி துரைச்சாமியின் அக்கா கூறுகையில், "காலை 5 மணிக்கு போலீசார் கோவைக்கு வரச் சொன்னதாகக் கிளம்பிய எனது தம்பி, என்கவுண்டர் செய்யப்பட்டதாக மதியம் தகவல் கிடைத்தது. போலீசார் திட்டமிட்டு இந்த என்கவுண்டரை செய்துள்ளனர். எனது தம்பி மீது எந்த தப்பும் இல்லை. தற்போது எனக்கு என் தம்பி துரை உயிரோடு வேண்டும். துரையோடு சென்ற எனது அக்கா மகனுக்கு என்ன ஆனது என்று கூடத் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துரைச்சாமியின் உடல் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.