தூத்துக்குடி: தூத்துக்குடி வட்டம், லயன்ஸ் டவுன் 4வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ். இவருக்கு அதே பகுதியில் இரண்டு சென்ட் இடம் சொந்தமாக உள்ளது. மேலும், இந்த இடத்திற்குரிய தீர்வை மற்றும் கரண்ட் பில் ராஜின் பெயரில் இருந்து வருகிறது. இதற்கிடையே, சில வருடங்களுக்கு முன் ராஜ் இறந்துவிட்ட நிலையில், அந்த வீட்டில் ராஜின் மனைவி ஜெர்மனி மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வீட்டிற்கு அருகே உள்ள ராஜ்-க்கு சொந்தமான வீட்டில் ராஜின் தங்கை பிரிண்டால் வசித்து வந்துள்ளார். திடீரென பிரிண்டால் அந்த இடத்தை தனது இடம் எனக் கூறி அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ராஜ் தரப்பும், ராஜ் தங்கை தரப்பும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கு ராஜ் தரப்புக்கு சாதகமாக முடிவடைந்த நிலையில், பிரிண்டால் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுக்குச் சென்றுள்ளார்.
எனவே, இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கும் நிலையில், வீட்டுக்கு தீர்வை எதுவும் இல்லாத பிரிண்டால், 47வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் ரெக்சிலின் ஏற்பாட்டின் பேரில் முறைகேடாக அரசு அனுமதியில்லா குடிநீர் வசதி அமைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடிநீர் பைப் அமைக்க குழி தோன்டியுள்ளனர்.
இதைப் பார்த்த ஜெர்மனி, வழக்கு நிலூவையில் இருக்கும்போது இவ்விதமான செயல் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஜெர்மனி தீர்வை எதுவும் இல்லாத பட்சத்தில் எவ்வாறு குடிநீர் பைப் லைன் கொடுக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பியதாக தெரிகிறது. இதனையடுத்து பைப்லைன் அமைக்க தோண்டிய குழியில் இறங்கி அதற்கு முதலில் பதிலளியுங்கள் எனக் கேட்டுள்ளார்.
இவ்வாறு குழியில் இறங்கி போராடிக் கொண்டிருந்த ஜெர்மனியை, பிரிண்டால் ஜெர்மனியை தலை முடியைப் பிடித்து, அடித்து வெளியே இழுத்து போட முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த திமுக பெண் கவுன்சிலர் ரெக்சில், ஜெர்மனியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதனை அப்போது அந்த பகுதியில் இருந்து அந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த சிலர் அதை செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜெர்மனி தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஜெர்மனியின் மகள் ஷர்லி கூறுகையில், “திமுக பெண் கவுன்சிலர் ரெக்சில் அராஜகத்தில் ஈடுபட்டு முறைகேடாக பணத்தைப் பெற்றுக் கொண்டு, எந்தவித ஆவணமும் இல்லாத வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளார்.
மேலும், அவருக்கு இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது தெரிந்தும் இவ்வாறு செயல்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, எனது தாய் ஜெர்மனியை பிரிண்டால் மற்றும் சிலர் தாக்கியுள்ளனர். இதற்கு காரணமாகவும், தூண்டுதலாகவும் திமுக பெண் கவுன்சிலர் ரெக்சில்தான் இருந்துள்ளார்.
எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திமுக கவுன்சிலரின் இந்த அராஜகத்திற்கு மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: “சத்யபிரதா சாகு ராஜினாமா செய்யலாம்..” விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து அன்புமணி ராமதாஸ்காட்டம்! -