தஞ்சாவூர்: தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசாமி திருக்கோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட மிகப் பழமையான வைணவத் திருக்கோயிலாகும். இங்கு மூலவர் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் சீதா தேவியுடன் காட்சியளிக்கிறார்.
ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய என இருவரது வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறு கையில் ராமாயண சுவடியும் ஏந்தியப்படி காட்சியளிக்கிறார்.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில், ஆண்டுதோறும் ராமநவமி விழா 11 நாட்களுக்கு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ராமநவமி விழா கடந்த 9 ஆம் தேதி, தெலுங்கு வருடப்பிறப்பன்று உற்சவர் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் சமேதராய் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் நடைபெறும் ராமநவமி பெருவிழாவில், நாள்தோறும் ஹனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ, யானை மற்றும் குதிரை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ராமநவமி பெருவிழாவின் 5ஆம் நாளான நேற்று (சனிக்கிழமை), பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்திய இசை முழங்க, உற்சவர் ராமபிரான் சிறப்பு அலங்காரத்துடன் ஹனுமந்த வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சடாரி சாற்றி, தீர்த்த மற்றும் குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 9ஆம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 17ஆம் தேதி ராமநவமி நாளில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. இறுதியாக, வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி உற்சவத்தில், இராமபிரானும், சீதா தேவியும் திருக்கல்யாண சேவையில், புஷ்பக விமானத்தில் புறப்பாடும் நடைபெற்று, இவ்வாண்டிற்காண ராமநவமி பெருவிழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! - MK STALIN