சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, இரண்டு விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையின் ரோந்துக் கப்பல் வந்து, தமிழ்நாடு மீனவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
தமிழ்நாடு மீனவர்கள், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, 18 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தனர். அதோடு அவர்களின் இரண்டு விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின்பு, 18 மீனவர்களும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரையும், உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதினார்.
இதை அடுத்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக மீனவர்கள் 18 பேரும், இலங்கை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை நீதிமன்றம் 18 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து, அவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
இதை அடுத்து, இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை தங்கள் பராமரிப்பிற்குள் வைத்துக் கொண்டு, அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட் விசா எதுவும் இல்லாததால், இந்திய தூதரக அதிகாரிகள் 18 மீனவர்களுக்கும், எமர்ஜென்சி சான்றிதழ்கள் வழங்கினர். அதோடு, இந்திய தூதரக அதிகாரிகள் 18 மீனவர்களுக்கும், விமான டிக்கெட்டுகளையும் ஏற்பாடு செய்து தமிழகம் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் இருந்து, சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 18 மீனவர்களும் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: எழுத்தாளர் பாவா பாஸ்டினா சூசைராஜ் 2024-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதை பெறுகிறார்!