ராமநாதபுரம்: மீன்வளத்துறையிடம் உரிய அனுமதிச் சீட்டு பெற்று கடந்த ஜூன் 30ஆம் தேதி காலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து 4 நாட்டுப் படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மீன்பிடிக்கச் சென்ற மறுநாள் (ஜூலை 1) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பாம்பன் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகள் மற்றும் தனுஷ்கோடியைச் சேர்ந்த ஒரு படகு என மொத்தம் நான்கு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த நான்கு படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில், தற்போது மேலும் 25 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மீனவர்கள் கைதை கண்டித்து நேற்று முன்தினம் (ஜூலை 3) பாம்பன் மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது நாட்டுப் படகுகளில் இலங்கை அரசைக் கண்டித்து கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இத்தகைய சூழலில், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (ஜூலை 5) சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால், முதலமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து முறையிட அதிகாரிகள் நேரம் வாங்கி தருவதாகக் கூறியதால், சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தை கைவிட்ட நாட்டுப்படகு மீனவர்கள், இன்று (ஜூலை 5) பாம்பன் தேசிய நெடுஞ்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தலைமை வகித்தார். மேலும், ஏபிஜே அப்துல் கலாம் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் முனியப்பன் மற்றும் பொறுப்பாளர் விஜின் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்படகு சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதுமட்டுமல்லாது, இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் திரளாக கலந்து கொண்டு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், மீனவர்களை விடுதலை செய்யவில்லை என்றால் வரும் நாட்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்: அத்துமீறும் திமுக அரசு என அண்ணாமலை விமர்சனம்