ராமநாதபுரம்: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் அணி செயல்பட்டு வருகிறது. இதில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதுவரை அவருக்கான சின்னம் உறுதி செய்யப்படாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே மேலும் நான்கு பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓச்சப்பன் என்பவரின் மகன் ஓ.பன்னீர்செல்வம் என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று, தெற்கு காட்டூரை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என மேலும் மூன்று பேர் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் இதனால் ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தலின் போது பிரபலங்களின் பெயர்களை கொண்டவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வது புதிதல்ல என்ற போதிலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதால் வாக்குகள் சிதறவும் வாய்ப்பு உள்ளதால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புப் குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் தாமதம்.. காத்திருந்த மக்களுக்கு டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை! - Ttv Dhinakaran Theni Campaign