ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (ஜூலை 31) மீன் பிடிப்பதற்கான உரிய அனுமதி சீட்டைப் பெற்று 359 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி தமிழக மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது, ND-TN-10-MM-73 என்ற எண் கொண்ட விசைப்படகு கடலில் கவிழ்ந்தது.
மீனவர்களின் படகு முழுமையாக கடலில் மூழ்கியதால், படகில் இருந்த விருதுநகர் மாவட்டம் நல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் முத்து முனியாண்டி (57), கருமலையான் என்பவரின் மகன் மலைச்சாமி (59), வேலுதேவர் என்பவரது மகன் ராமச்சந்திரன் (64) ஆகிய 4 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியானது.
இதனை அடுத்து மீனவர்கள் கரை திரும்பாததால் சக மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை கடலில் தேடினர். இது குறித்து மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, கடலில் மூழ்கிய படகில் இருந்த நான்கு மீனவர்களில் மூவர் மீட்கப்பட்டதாகவும், அவர்களை புங்குடுதீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு மீனவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்களின் உறவினர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளன" - காவல்துறை வாதம்! - aiadmk ex minister saroja case