திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத நிலையில், இன்று ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள தளபதி முருகன், தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் கார்த்திகேயனிடம் வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி ரசிகராக உள்ளோம். பல்வேறு உதவிகளை ரசிகர் மன்றம் மூலமாக செய்து வருகிறோம். சமீபத்தில் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளோம். தலைவர் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிய நிலையில், அவர் வராததால் என்னைப் போல் ஒரு சிலர் தற்போது வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
தலைவர் தேர்தல் செலவுக்கு காசு பணம் எதுவும் தர வேண்டாம், அவரது ஆசீர்வாதம் மட்டுமே எனக்கு வேண்டும். தலைவரின் அன்புக்காகவே பல ஆண்டுகள் அவரது இயக்கத்தில் இருந்து உழைத்து இருக்கிறோம். ரஜினிகாந்த் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும், வாய் திறக்காமல் இருந்தாலே நான் வெற்றி பெற்று விடுவேன்.
ஆனால், வென்ற பிறகு எந்த கட்சிக்கு செல்வேன் என என்னால் இப்போது கூற முடியாது. ரஜினிகாந்த் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும். அவரது முகத்தைப் பார்த்தாலே போதும் வெற்றி நிச்சயம். ரஜினிகாந்த் படத்துடனே வாக்கு சேகரிக்க களம் இறங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரனின் அலுவலகப் பணியாளர் மீது வழக்குப்பதிவு! - Nainar Nagendran Office Issue