திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சுரேந்திரராஜா என்பவருக்குச் சொந்தமான பருத்தி ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்திலேயே பருத்தி கிடங்கும் இணைந்து உள்ளது. இந்த நிறுவனம் தனது ஆலை மற்றும் பருத்திக் கிடங்குக்கு ராஜபாளையத்தில் இயங்கி வரும் தேசிய காப்பீடு நிறுவனம் (National insurance Co Ltd) மூலம் "தீ மற்றும் சிறப்பு காப்பீட்டு கொள்கை" கீழ் காப்பீடு செய்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று பருத்தி கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, பருத்தி ஆலை நிறுவனம் சார்பாக நஷ்ட ஈடுக்கான காசோலை கேட்டதற்கு, காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை தாமதப்படுத்தி பின் அதனை நிராகரித்தது. அதற்கான காரணமாக, கிடங்கின் இடம் காப்பீடு செய்யப்பட்ட பகுதியில் இல்லை என தெரிவித்தது, என்றாலும் முழு ஆலையும் ஒரே தபால் முகவரியுடன் தான் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே, பருத்தி ஆலை நிறுவனம் சார்பில், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பருத்தி ஆலை தரப்பில் கூறும் போது, காப்பீட்டு நிறுவனம் ஆலையின் அமைப்பை நன்கு அறிந்திருந்தது மற்றும் ஆலையின் முழுமையான வளாகத்திற்கும் காப்பீடு வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர். மேலும், காப்பீட்டு நிறுவனம் அநியாய வாணிப முறைகள் மற்றும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதற்கான நஷ்ட ஈடு, மனவேதனை மற்றும் சட்டச் செலவுகள் உள்பட மொத்தம் 9.91 கோடி ரூபாய் வட்டியுடன் இணைந்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், 2018 டிசம்பர் 19 அன்று தீ விபத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக 9 கோடியே 50 லட்சத்து 63 ஆயிரத்து 935 ரூபாய் தொகை 9 சதவீத வட்டியுடன் தீ விபத்து நிகழ்ந்த தேதி முதல் செலுத்த வேண்டும்.
மேலும், மன உளைச்சல் மற்றும் மன வேதனைக்காக 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும், வழக்குச் செலவிற்காக ரூபாய் 50 ஆயிரமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நஷ்ட ஈடு தொகையை வட்டியுடன், மன உளைச்சலுக்கான நஷ்ட ஈட்டையும், வழக்குச் செலவு உத்தரவு நகலைப் பெற்று ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் செலுத்தப்பட வேண்டும். ஏதேனும் தவறினால், அதன் பிறகு காப்பீட்டு நிறுவனம் ஆண்டுக்கு 6.5 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் என நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா?”.. தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்! - Sarah Tucker College Salary pending