ஈரோடு: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீா்நிலைகள் நிரம்பி உபரிநீர் ஓடைகளில் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடியதால், தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ஈரோடு நகரின் பல்வேறு பகுதியின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு ஏபிடி சாலையில் உள்ள காலணி கடையில் மழைநீர் புகுந்ததால், தீபாவளிக்காக மொத்தமாக வாங்கி வைக்கப்பட்ட காலணிகள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக கடையின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரோடு ஏபிடி சாலையில் சல்மான் என்பவருக்குச் சொந்தமான காலணிகள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக காலணிகள் உற்பத்தி செய்து நிறுவனங்களில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கவரைப்பேட்டை ரயில் விபத்து; ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை!
இந்நிலையில் நேற்று பெய்த மழையால் மழைநீர் கடைக்குள் புகுந்துள்ளது. இதனால், விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த காலணிகள் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, சேதமடைந்த பொருள்களை அகற்றி கடையின் உள்ளே தேங்கிய மழைநீரை கடை ஊழியர்கள் அகற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையின் உரிமையாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து கடையின் உரிமையாளர் சல்மான் கூறுகையில், “ஏபிடி சாலையில் காலணி கடை வைத்துள்ளோம். இப்பகுதியில் மழை பெய்ததால் மழை நீர் முழுவதுமாக கடைக்குள் இறங்கிவிட்டது. கடையின் முன் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை மாநகராட்சி முறையாக தூர்வாராமல் உள்ளது. இதனால் தற்போது மிகப்பெரிய இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து மீள்வது எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு நகராட்சி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. தீபாவளி பண்டிகைக்காக ரூ.80 லட்சம் மதிப்பில் காலணிகள் கொள்முதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்தோம். அவை அனைத்தும் தற்போது மழையால் சேதமடைந்துள்ளது. எனவே, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் முறையாக சாக்கடை கால்வாயை தூர்வாரி, மழை நீர் செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்