சென்னை(தாம்பரம்): வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை முதல் பெய்த கன மழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக புது பெருங்களத்தூர் கே.கே நகர் தாமரை தெரு உள்ள குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கியால் அப்பபகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சூழந்துள்ள மழை நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் மேல் தளத்தில் மாற்றிக்கொண்டு உள்ளனர். மேலும் இரு சக்கர வாகனங்களையும் வீட்டிற்குள் பார்க் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய அப்பகுதியை சேர்ந்த தீபா, "புது பெருங்களத்தூர கே கே நகர் தாமரை தெரு பகுதியில் வசித்து வருகிறோம். இதேபோன்று அதிக அளவில் மழை பெய்யும் பொழுது எங்கள் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உயரமான பகுதி தான் ஆனாலும் மழைக்காலங்களில் இந்த பாதிப்பை தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.
இதையும் படிங்க: கனமழையால் வெள்ளம் சூழ்ந்த சென்னை புறநகர்ப் பகுதிகள்..இஎஸ்ஐ மருந்தகத்துக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் அவதி!
சாலைகளில் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது தற்போது வீட்டின் கார் பார்க்கிங் வரை மழை வந்துவிட்டது. இரவு முழுவதும் மழை பெய்தால் வீட்டிற்குள் நிச்சயம் மழை நீர் புகுந்து விடும் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. வீட்டில் சின்ன குழந்தைகள் வைத்துள்ளோம் பால் உள்ளிட அத்தியாவசிய பொருட்களை கூட எங்களால் சென்று வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் உயரமான இடங்களிலும் மேல் தளத்தில் உள்ள வீடுகளிலும் வைத்துள்ளோம், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பார்வையிட்டு வீட்டின் பின்புறம் உள்ள கால்வாய்களை பார்த்து விட்டு சென்று விட்டனர்.வேறு எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. இந்த பகுதியில் தண்ணீர் செல்லும் கால்வாய்களை முறையாக தூர்வாததால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியிலே சூழ்ந்து நிற்கிறது, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீரை அகற்ற வேண்டும்," என தெரிவித்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தி கூறுகையில்,"கடந்தாண்டு மழை பெய்த போது எங்கள் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விட்டது. அதனால் பயந்து கொண்டு எங்கள் பொருட்களை பாதுகாத்து வருகிறோம், எங்களால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட வெளியே செல்ல முடியவில்லை வருடம் தோறும் இதே நிலையை சந்தித்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ள கால்வாய்களை சரியாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.