தேனி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் இரண்டு அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் நேற்று 121.5 அடியாக இருந்த நிலையில் இன்று 123.30 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து 6 ஆயிரத்து 264 கன அடியாக உள்ளது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,108 கன அடியாகவும், அணையின் இருப்பு 3,281 கன அடியாகவும் இருக்கிறது.
இதனால் இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், முல்லைப் பெரியாற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வீரபாண்டி பெரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
கேரளாவில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு: இதே போல, கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றும் மூணாறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் கல்லார்குட்டி அணை, பாம்பிளா அணை திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக, முதிரப்புழா ஆறு மற்றும் பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டப்பனை இடுக்கி சாலை, மூணாறு கேப் ரூட்டில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ள இடங்களில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மூணாறு அருகே தனியாருக்கு சொந்தமான லாக்காடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏக்கர் கணக்கில் தேயிலை செடிகள் சேதமடைந்துள்ளன. அப்போது அப்பகுதியில் தொழிலாளர்கள் வேலை செய்யாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதே போல, மூணாறு அருகில் உள்ள மறையூர் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால், பாம்பாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிக்கப்பட்டு உள்ளது.