சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ததுள்ளது. குறிப்பாக, சென்னையை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வெயிலால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தினம்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கோ அல்லது அதனை தாண்டியோ சென்னையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டின் உள்ளே முடங்கி கிடக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் சென்னையில் அவ்வபோது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும், சென்னையில் இரண்டு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, அசோக் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில மாதங்களாக சென்னை மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென காலை நேரத்தில் பெய்த மழையால் குளிர்மையான சூழல் நிலவுவதால் மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.