சென்னை: ஆவடி அண்ணனுர் அருகே மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாகவும், ஆபத்தான முறையிலும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்ய இதுகுறித்த வீடீயோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ரயிலில் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பயணம் மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்களுக்கு எழும்பூர் ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “ரயிலில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் புரிதல் இல்லாமல் சக பயணிகளை தொந்தரவு செய்கின்றனர். இன்று அண்ணனுரில் மாணவர்கள் ரயிலில் தொங்கியபடியும், பாடல்களை பாடிக்கொண்டு, சத்தத்தை எழுப்பியவாறு சென்றுள்ளனர். ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவருக்கும் இடையூறு கொடுக்கின்றனர்.
பொது அமைதியை சீரழிக்கும் செயல்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுப்படக்கூடாது. இது குறித்து மாணவர்களுக்கு பல வாரங்களாக தொடர்ந்து குறும்படம் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்கள் ஈடுபடும் செயல் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் செயல்களை பார்த்துக்கொண்டு ரயில்வே காவல்துறை அமைதியாக இருக்காது.
அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஈடுபடும் அனைத்து செயல்களும் கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, பயணிகளுக்கு இடையூறு செய்த மாணவர்களின் வீடியோவை வைத்து, அவர்களின் ஊருக்கு சென்று அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். கல்லூரி நிர்வாகமும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும். மாணவர்களின் செயலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அவர்களில் செயல் எல்லை மீறி சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை தான் எடுக்க முடியும். ரயிலில் செல்லும் பொழுது கால்களை தேய்த்துக்கொண்டு செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு கால்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கால்களை இழந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே, பெற்றோர்களும் மாணவர்களை கண்டிக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர உபத்திரம் செய்யக்கூடாது” இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்களில் குளறுபடி? தமிழக அரசு விளக்கம் அளிக்க கோர்ட் உத்தரவு!