ராமநாதபுரம்: ரயில்வே வாரிய தலைவரும், முதன்மை நிர்வாக அதிகாரியுமான ஜெயா வர்மா சின்ஹா நேற்று (பிப்.21) ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்ட வழித்தடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா மற்றும் கோட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர். பின்னர், பாம்பன் கடல் குறுக்கே கட்டப்பட்டு வரும் நவீன புதிய ரயில் பாலத்தையும் ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டார்.
புதிய பாம்பன் ரயில் பாலத்தை நிர்மாணித்து வரும் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் தேசியத் தலைவர் மற்றும் செயல் இயக்குனர் பிரதீப் கவுர், முதன்மை திட்ட அதிகாரி பி.கமலாகர ரெட்டி ஆகிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே வாரியத் தலைவர், தங்கு தடையற்ற ரயில் போக்குவரத்திற்கு கடலையும், நிலத்தையும் இணைக்கும் இந்த பகுதியில் அமைக்கப்படும் புதிய பாலம் பாதுகாப்பாக, நீடித்து நிற்கும் வகையில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
முன்னதாக, அவர் மதுரையிலிருந்து மண்டபம் ரயில் நிலையம் வரை சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ரயில் பாதையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவருடன் ரயில்வே வாரிய நிர்வாக இயக்குனர் அலோக் குமார் மிஸ்ரா, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி அமித் குமார், தலைமை முதன்மை ரயில் இயக்க மேலாளர் என்.ஸ்ரீ குமார், தலைமை முதன்மை பொறியாளர் தேஷ் ரத்தன் குப்தா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கொல்ல முயன்ற கொள்ளையன்.. ஈரோட்டில் நடந்த திகில் சம்பவம்!