கோயம்புத்தூர்: புதிய தமிழகம் கட்சியின், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.7) குனியமுத்தூரில், கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவருக்கு அளிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, “2024ஆம் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. தொகுதி எண்ணிக்கையிலும், கொள்கை அடிப்படையிலும் ஒத்துப்போகும் வலுவான கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 2 அல்லது 3 இடங்களைக் கேட்க விரும்புகிறோம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று சொல்வதற்கு இப்போது இடமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவிழந்துள்ளது. தமிழகத்தில், தற்போது புதிய அரசியல் சூழல் நிலவுகிறது. புதிய தமிழகம் கட்சி சுதந்திரமாகச் செயல்பட நினைக்கின்றது.
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக - அதிமுக கூட்டணி காலம் கடந்து விட்டது. எந்த கட்சியுடன் கூட்டணி என்ற முடிவுக்கு நாங்கள் வரவில்லை. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் சந்திப்பது இயல்பு. தமிழ்நாட்டில் தற்போது, அதிமுக - திமுக - பாஜக என்று 3 கூட்டணிகள் உள்ளது. நாங்கள் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்.
வலுவான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம். பிரதமர் வேட்பாளர் என்று கூறி தேர்தலை சந்திக்கத் தேவையில்லை. இதுபோன்ற நடைமுறை இந்தியாவில் இல்லை. மற்ற கூட்டணி குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை என்றார். நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், கட்சி துவங்கியவுடன் உறங்கச் சென்று விட்டார்கள். எழுந்திருக்கும் போது அதைப்பற்றி பேசுவோம் என்றார்.
மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் குறித்து கேட்டதற்கு, தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவது குறித்துப் பேசுகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கீடு செய்யக்கூடாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அண்ணாமலைக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் என்ன Cheap ஆ..!"- டென்சனான டி.ஆர் பாலு!