ஈரோடு: அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு ரூ.1602 கோடி செலவில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த திட்டப்பணிகளில் ரூ.300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவடைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதன்படி அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் வாயிலாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் 145 குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த திட்டத்தில், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 80 ஏக்கர் பரப்பளவுள்ள புங்கம்பள்ளி குளம், 60 ஏக்கர் பரப்பளவுள்ள நல்லூர் குளம், நொச்சிக்குட்டை குளம் மற்றும் 50க்கும் மேற்பட்ட குட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர குழாய் பதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், வெள்ளோட்ட அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புங்கம்பள்ளி மற்றும் நல்லூர் குளத்திற்கு அத்திக்கடவு தண்ணீர் குழாய் வழியாக வந்து சேர்ந்தது.
ஆனால், அத்திக்கடவு அவினாசி திட்டம் நடைமுறைக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் இன்னும் வராத நிலையில், குளம் மற்றும் குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்தது. அதன்படி புங்கம்பள்ளி, நல்லூர் குளங்களுக்கு அத்திக்கடவு - அவினாசி திட்ட குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. இந்த நிலையில், குளத்தில் வந்த நீரில் மக்கள் பூக்களை தூவி வரவேற்றனர்.
இது குறித்து நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி கூறுகையில், "எங்கள் பகுதியில் உள்ள புங்கம்பள்ளி குளம், நல்லூர் குளம், நொச்சிக்குட்டை குளம் மற்றும் குட்டைகள் ஆகியவை அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
ஆனால், அத்திட்டம் நடைமுறைக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதனை அடுத்து உறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு எங்கள் பகுதியில் தற்போது தண்ணீர் நிரப்பப்பட்டு, மக்களின் 60 ஆண்டுகால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.