சென்னை: புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்த டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன் இவர் லாரி கிளினராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என மகன்கள் உள்ளனர் இருவரும் இரட்டையர்கள் ஆவார்.
இதில் ஹேமச்சந்திரன் ஐடி படிப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகிறார். ஹேமராஜன் சித்தா பார்மட்டிஸாக பணிபுரிந்து வருகிறார். இதில் ஹேமச்சந்திரன்(26) 150 கிலோ உடல் பருமன் அதிகரித்து இருந்ததால் உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்துள்ளார். இதனால் யூடியூப் மூலமாக மருத்துவ சிகிச்சைகளை தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பெருங்கோ என்பவர் தனது யூடியூப் சேனலில் உடல் எடையை குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அதனைப் பார்த்த ஹேமச்சந்திரன் அவரிடம் ஆலோசனை கேட்பதற்காக குடும்பத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை சென்று குரோம்பேட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் பெருங்கோவை சந்தித்துள்ளனர்.
அப்போது ஹேமச்சந்திரனுக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் சில பரிசோதனைகளை செய்து முடித்த பின்பு உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்யலாம் என ஆலோசனை கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் பெருங்கோவை சந்தித்தபோது அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 8 லட்ச ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் பம்மல் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 4 லட்சம் ரூபாய் ஆகும் என கூறியுள்ளார். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டிய அனைத்து பரிசோதனைகளையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் பெருங்கோ மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து ஹேமச்சந்திரன் உடலில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால் மயக்க மருந்து மட்டும் தற்போது கொடுக்க முடியாது சர்க்கரை அளவு குறைந்த உடன் கூறுகிறோம் என வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து முடித்துவிட்டு 22 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அறுவை சிகிச்சை மையத்திற்கு ஹேமச்சந்திரனை மருத்துவர் பெருங்கோ அழைத்துச் சென்றுள்ளனர்.
இளைஞர் உயிரிழப்பு: இதையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு மயக்க மருந்து கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 10.15 மணிக்கு அறுவை சிகிச்சை மையத்திலிருந்து வெளியே வந்த மருத்துவர் பெருங்கோ, மயக்க மருந்து கொடுத்ததில் ஹேமச்சந்திரனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாக கூறி மீண்டும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். இதையடுத்து குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமச்சந்திரன் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்ததாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்: இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில் பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பதற்கு அறுவை சிகிச்சை செய்தபோது தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் எந்த ஒரு வசதியும் இல்லாத அந்த தனியார் மருத்துவமனையின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் அதிமுக நிர்வாகியை காவல் ஆய்வாளர் தாக்கியதாக எஸ்பியிடம் புகார் - சிசிடிவி காட்சிகள் வைரல்!