சென்னை: புதுச்சேரி முத்தியால் பேட்டையை அடுத்த டிவி நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவர் மார்க்கெட்டிங் கமிட்டியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏமச்சந்திரன், எமராஜன் என இரட்டை மகன்கள் உள்ளனர். இதில், ஏமச்சந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு, டிசைனிங் பணியில் இருந்துள்ளார். எமராஜன் சித்தா (பார்மஸி) கான்டிராக்டில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஏமச்சந்திரன் 150 கிலோ உடல் பருமன் அதிகரித்து இருந்ததால், உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் எடை குறைப்பிற்கு ஆலோசனை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் ஆலோசனை கொடுத்துள்ளனர். இதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்ய ஏமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் காலை 9.30 மணி அளவில் அறுவை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, 10.15 மணியளவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஏமச்சந்திரன்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏமச்சந்திரன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த ஏமச்சந்திரனின் தந்தை செல்வநாதன் அளித்த புகாரில், "நான் அரசு எடுத்து நடத்தும் சொயிட்டி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் லாரி கிளீனராக வேலை செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில், மூத்த மகன் பெயர் ஏமச்சந்திரன். அவன் IT முடித்துவிட்டு, வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். எனது இரண்டாவது மகன் சித்தா (பார்மஸி) கான்டிராக்டில் வேலை செய்து வருகிறார்.
எனது மூத்த மகன் ஏமச்சந்திரன் (26), அவனது உடல் பருமன் காரணமாக, (150 கிலோ) எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக யூடியூப் மூலமாக பல மருத்துவர்களைத் தேடிவந்தார். அப்பொழுது, டாக்டர் பெருங்கோ சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஆவார். அவருடைய யூடியூப் பேட்டியைக் கண்டு, அவரிடம் உடல் எடை குறைக்க மருத்துவ ஆலோசனைப் பெற, அவரைச் சந்திக்க சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தோம்.
அங்கு அவரைச் சந்தித்து, உடல் எடை குறைக்க கடந்த வருடம் ஏப்.12ஆம் தேதி ஆலோசனை நடத்தினோம். அப்பொழுது, அவர் என் மகனுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், இந்த அறுவை சிகிச்சைக்கு சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்த பின், இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று எங்களிடம் டாக்டர் பெருங்கோ ஆலோசனை கூறினார்.
அதற்கு நாங்கள் எங்கள் குடும்பத்துடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு, இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம் என்று கூறிவிட்டுத் திரும்பவும் பாண்டிச்சேரிக்குச் சென்று விட்டோம்.
அதன்பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் நான் மட்டும் அந்த மருத்துவமனைக்கு வந்து, டாக்டர் பெருங்கோவைச் சந்தித்து, எங்களுக்கு குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எங்களால் அதிக பணம் செலவு செய்ய முடியாது என்று கூறினேன். அதற்கு அவர், என்னுடைய PA உங்களைக் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசுவார் என்று கூறினார்.
அதன்பிறகு, அவர் கூறிய படியே மருத்துவரின் PA என் கைப்பேசிக்குத் தொடர்புகொண்டு, நான் மருத்துவரின் PA பேசுகிறேன், நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் வரை செலவாகும். அதனால் நீங்கள் பம்மலில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்ள ரூ.4 லட்சம் செலவாகும் என்று கூறினார்.
அதன்பிறகு, டாக்டர் வெளிநாடு செல்ல இருப்பதால் கூடிய விரைவில் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். அதன்பிறகு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அன்று முதலில் சென்ற மருத்துவமனைச் சென்று, டாக்டர் பெருங்கோவைச் சந்தித்து, உங்கள் PA கூறிய படி பம்மலில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம் என்று கூறினோம்.
அதன்பிறகு, அவர் இந்த அறுவை சிகிச்சைக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை இந்த மருத்துவமனையிசெய்தார். அந்த மருத்துவப் பரிசோதனையின் பொழுது, அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன் மயக்க மருந்து கொடுக்கும் ஆலோசனைப்படி, என் மகனுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், தற்பொழுது மயக்க மருந்து கொடுக்க இயலாது, சர்க்கரை நோயின் அளவு குறைந்த உடன் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம் என்றனர்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பம்மலில் உள்ள மருத்துவமனைக்கு வந்து, காலை 11 மணியளவில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக என் மகனை அட்மிட் செய்தோம். அதன்பிறகு மருத்துவப் பரிசோதனை செய்தார்கள். செய்துவிட்டு அறுவை சிகிச்சையை கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காலை 9.30 மணிக்கு செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவர் கூறியபடியே, கடந்த 22ஆம் தேதி அன்று காலை 9.30 மணியளவில் மருத்துவர் மருத்துவமனைக்கு வந்து, அறுவை சிகிச்சை செய்வதற்கு எனது மகனுக்கு மயக்க மருந்து செலுத்த மருத்துவர் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் உள்ளே சென்றார்கள்.
அதன்பிறகு, காலை சுமார் 10.15 மணியளவில் டாக்டர் பெருங்கோ வெளியே வந்து, என்னிடம் மயக்க மருந்து கொடுத்ததில் உங்கள் மகனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது. அதனால் நாங்கள் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோம்.
அதனால் நீங்கள் அந்த மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு, அவர் என் மகனை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று விட்டார். எங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என் மகனுக்கு உயிருக்கு ஆபத்தான முறையில் தவறான சிகிச்சை அளித்த டாக்டர் பெருங்கோ மற்றும் அவருடைய உதவியாளர்களாக இருந்தவர்கள் மீதும், மருத்துவ வசதிக் குறைவாக இருக்கும் இந்த மருத்துவமனை மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி வழங்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.4 கோடி விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு எதிரான மனு தள்ளுபடி! - NAINAR NAGENDRAN CASE