புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் 30 சட்டமன்ற தொகுதியையும் உள்ளடக்கியுள்ளது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த புதுச்சேரியில் கடந்த 1963ம் ஆண்டு தான் முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இதுவரை புதுச்சேரி 15 தேர்தல்களை சந்தித்துள்ளது.
கடந்த தேர்தல் களம்: புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்கள் இருந்த நிலையில், 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 90 ஆயிரத்து 895 வாக்குகள் பதிவாகின. இவற்றில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வெ.வைத்திலிங்கம் 4 லட்சத்து 44 ஆயிரத்து 981 அதாவது 56.27% வாக்குகளை பெற்றார்.
என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டாக்டர் நாராயணசாமி 2 லட்சத்து 47 ஆயிரத்து 956 வாக்குகள் அதாவது 31.36% சதவீத வாக்குகளை பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 025 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் கோட்டை: இதுவரை இங்கு நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில், 11 முறை வென்று, புதுச்சேரியை தமது கோட்டையாக தக்கவைத்து கொண்டுள்ளது காங்கிரஸ். திமுக., பாமக., அதிமுக., என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன. புதுச்சேரியின் முதல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் வெற்றி பெற்றார். 1967, 1971 என தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி வாகையை சூடிய நிலையில் 1977ம் ஆண்டு அதிமுக சார்பில் அரவிந்த பாலாபழனூர் வெற்றிப் பெற்றார்.
மீண்டும் களம் காணும் பாஜக: 2004-ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணியில் பாஜக வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டு 1 லட்சத்து 72 ஆயிரத்து 472 வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையைத் தக்கவைத்தார். 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் விக்னேஷ்வரன் தனித்து நின்று 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அதன்பிறகு, தற்போதுதான் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து பாஜக களம் கண்டுள்ளது.
2024 தேர்தல் வாக்கு நிலவரம்: 2024ம் ஆண்டின்படி, புதுச்சேரியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 41 ஆயிரத்து 437 பெண் வாக்காளர்களும், 148 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் என மொத்தம் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற 2024 தேர்தலில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் வாக்களித்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 78.90.
முக்கிய வேட்பாளர்கள்: இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிமுக சார்பில் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மேனகா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
பலமான கூட்டணி: பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக பலம் வாய்ந்த கூட்டணி கட்சிகள். பாஜக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் நமச்சிவாயம், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியின் மருமகன். இவர், புதுவை உள்துறை, கல்வித் துறை அமைச்சராக இருக்கும்போதும், எளிதில் அணுகக் கூடியவராக இருந்துள்ளார். அவர் காங்கிரஸில் இருந்தபோது மாநிலத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
வெற்றியை தக்கவைக்குமா காங்கிரஸ்?: காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். திமுக, விசிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு காங்கிரஸுக்கு பிளஸாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்கள், கடந்த மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாஜகவில் இணைந்து காங்கிரஸுக்கு எதிராக செயல்படுவது போன்ற விஷயங்கள் அக்கட்சிக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 தேர்தலின்போது, மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நம்சிவாயம், காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபட்டார். ஆனால் தற்போது அவரே காங்கிரஸுக்கு எதிராக பாஜ வேட்பாளராக உள்ளார். முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவர்களை பாஜகவின் பக்கம் இழுத்துள்ளார். இவையும் காங்கிரஸ்க்கு பலவீனமாகக் கருதப்படுகிறது.
அதிமுக நிலைபாடு: அதிமுக சார்பில் கோ. தமிழ்வேந்தன் களம் காண்கிறார். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், புதுச்சேரி மக்களுக்கு பரிச்சயம் இல்லாவிட்டாலும், அவர் சார்ந்த சமுதாயத்தின் வாக்குகளை கணிசமாகப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக 1.32 லட்சம் வாக்குகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.மேனகா சித்த மருத்துவராவார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லை என்றாலும், கட்சியினரின் பிரசாரம் வாக்குகளை பெற்றுத்தரும் என நம்பிக்கை உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 22 ஆயிரத்து857 வாக்குகள் (2.84 சதவீதம்) கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்டுவரும் நிலையில், கோட்டையில் இம்முறையும் காங்கிரஸ் வெற்றி கொடியேற்றுமா? கோட்டையை பாஜக தகர்க்குமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளான ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.