புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதி அருகே உள்ள புது நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து விஷவாயு வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறுவதாக புகார் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய விஷவாயுவால், அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செந்தாமரை (80), காமாட்சி (55) மற்றும் மாணவி செல்வராணி (15) ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அப்பகுதி முழுவதும் உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்து விஷவாயு வெளியேறியதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து, ஒலிபெருக்கி மூலம் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதற்கிடையில், மூச்சுத்திணறல் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியில் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, விஷவாயு தாக்கி இறந்த இரண்டு முதியவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்தார். தற்போது பாதாளச் சாக்கடைகளில் இருந்த விஷ வாயுக்களை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, "கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் போதிய பராமரிப்பு இல்லை. இப்பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் திட்டத்தில் நச்சுக்கழிவு வாயு வெளியேறும் பைப் லைன்களில் கசிவு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதை அதிகாரிகள் குழு தொடர்ந்து கண்காணித்து இருக்க வேண்டும். தவறிவிட்டதன் விளைவே இன்று மூன்று உயிர்களை நாம் இழந்துள்ளோம்.
கடந்த 50 ஆண்டுகளாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அரசு இதை முக்கிய பிரச்னையாக கருதி, தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ஆறுதல் மட்டும் தெரிவிக்காமல் இழப்பீடும் வழங்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட பாணியில் ஏடிஎம்மில் திருட்டு - 15 வயது வடமாநில சிறுவன் கைது!