சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள ஆன்மிக திவ்ய பாசுரங்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியின் நாயகனாக இளையராஜா கலந்து கொண்டார்.
இசை அமைப்பாளர் இளையராஜா தமிழ் திரையுலகின் இசை கடவுளாகவே பார்க்கப்படுகிறார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர், தலைமுறைகள் கடந்தும் இசை ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருபவர். திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி ஆன்மிக பாடல்கள், சிம்பொனி இசை, திருவாசகம் உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆன்மிக திவ்ய பாசுரங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்,
இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா பாசுரங்களை வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், "இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு அன்பான உள்ளங்களை சந்திப்பது பல்லாண்டு பல்லாண்டு நீண்டு கொண்டே போக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.
மேலும், "திருவாசகத்திற்கு இசையமைத்த பிறகு திவ்ய பிரபந்தத்திற்கும் இசையமைக்க வேண்டும் என பலர் கேட்டு கொண்டனர் எனவும், அது நடக்க வேண்டிய காலத்தில் நடந்துள்ளது" எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசியவர், "இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், வளவளவென்று மற்ற சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களை போல் இல்லாமல், இது வேற ரகமாக திவ்ய பிரபந்தமாக நடைபெற்றதால் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்து அவருக்கே சரணடைகிறேன்" எனவும் இளையராஜா கூறினார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா - ஜாகீர் இக்பால் திருமணம் கோலாகலம்! - Sonakshi Sinha Zaheer Iqbal wedding