திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா, திருவாலங்காடு அருகே மணவூர் காப்புக்காடு பகுதியில் இருந்து 3 வயதுடைய பெண் புள்ளி மான் ஒன்று, தண்ணீர் தேடி அருகில் உள்ள பொன்னாத்தம்மன் கோயில் குளப்பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், மானை துரத்தி கடித்து, மானின் பின்பக்க காலை தனியாக இழுத்துச் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த மான் வலியால் கத்தி துடித்துள்ளது. இந்த சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் தொழுதாவூர் ஊராட்சி மன்றத் தலைவர் அருள் ஆகியோர், விரைந்து வந்து நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து உடனடியாக திருவாலங்காடு போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால், வனத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் காலதாமதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த மானை மீட்டு, அருகில் இருந்த திருவாலங்காடு கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் தற்போது மருத்துவர்கள் மானுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மான் படுகாயமடைந்து இருப்பதால், மருத்துவர்கள் கவனமுடன் சிகிச்சை அளித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.