மதுரை: மதுரை - கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் திருமங்கலம் அருகே அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச் சாவடி. இதனைக் கடந்துதான் அருகே உள்ள திருமங்கலம், விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, கன்னியாகுமரி மட்டுமன்றி திருமங்கலம் அருகே பிரிந்து செல்லும் சாலையில் திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, குற்றாலம் ஆகிய ஊர்களுக்கும் செல்ல வேண்டும்.
மதுரை - கன்னியாகுமரி சுங்கவழி தனியார் நிறுவனம் (Madurai Kanniyakumari Tollway Pvt Limited - MKPTL) என்ற நிர்வாகத்தின் கீழ், இந்த சுங்கச்சாவடி சுமார் 52.3 கிமீ தூரத்தை நிர்வகிக்கும் வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வரை 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் எம்கேடிபிஎல் (MKPTL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்: நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியைக் கடந்து செல்கின்றன. இதே மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், கன்னியாகுமரி - எத்தூர்வட்டம், சாலைப்புதூர் - மதுரை, நாங்குநேரி - கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுங்கவழி தனியார் நிறுவனங்களின் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் மதுரை - கன்னியாகுமரி டோல் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திருமங்கலம், கப்பலூர், கப்பலூர் தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். காரணம், இந்த சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் உள்ளூர் மக்களுக்கும் கட்டணம் விதிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக அடிக்கடி அங்கே பிரச்சனைகள் எழுவதாகவும், அதனால் இந்த சுங்கச்சாவடியை முழுவதுமாக அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுங்கக் கட்டணத்தால் கொந்தளிக்கும் உள்ளூர் மக்கள்: கார், வேன், ஜீப் வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.100, இருமுறை சென்றுவர ரூ.150, மாதாந்திரக் கட்டணம் ரூ.3,360 எனவும், வேன், சிற்றுந்து ஒரு முறை செல்ல ரூ.165, இருமுறை சென்று வர ரூ.245, மாதாந்திர கட்டணம் ரூ.5,430 எனவும், பெரிய வாகனங்களுக்கு ரூ.340, இருமுறை சென்று வர ரூ.510 என நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்புதான் அப்பகுதி மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் இதை கண்டுகொள்வதே இல்லை: இதுகுறித்து கப்பலூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் செல்வியின் கணவர் பரமசிவம் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த 2020 வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் இந்த சுங்கச்சாவடியில் கெடுபிடி செய்ய ஆரம்பித்தனர். இதற்காக போராட்டம் நடத்தினால் தற்காலிகமாக வாங்காமல் அனுமதிப்பர். ஆனால் மறுபடியும் பிரச்சனை தொடரும்.
உள்ளுர் வாகனங்களுக்கான அனுமதி குறித்து எழுத்துப்பூர்வமாக வழங்க வலியுறுத்தினால் அதுகுறித்து சுங்க நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. இதற்கான போராட்டத்தில் காவல்துறை அவர்களுக்கே ஆதரவாக உள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கான பாதையிலும்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். அருகில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. அதனால், நாள்தோறும் இந்த பாதையைக் கடந்துதான் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பலமுறை சென்றுவர வேண்டும்.
ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். அதேபோன்று இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே செங்கோட்டை, தென்காசி சாலை உள்ளது. அதில் செல்பவர்களுக்கும்கூட இங்கு கட்டணம் வசூல் செய்கிறார்கள். ஆட்சிக்கு வருகின்ற எந்த அரசாங்கமும் இந்தக் கொள்ளையைக் கண்டுகொள்வதே இல்லை. இந்த சுங்கச்சாவடியை முழுவதுமாக அகற்றும்வரை இந்த பிரச்சனை முடிவுக்கு வராது" என்கிறார்.
மக்கள் பணத்தை சுரண்டும் நிறுவனம்: அதனைத் தொடர்ந்து பேசிய உள்ளூர் வணிகர் ஜெயக்குமார், அருகிலுள்ள திருமங்கலத்திற்கு அடிக்கடி எங்களது வாகனங்களில் சென்று வர வேண்டிய நிலையில், ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவது மிகக் கொடுமையானது. கடந்த 2020ஆம் ஆண்டு வரை எங்களது ஆதார் அட்டையைக் காண்பித்து சென்று வந்து கொண்டிருந்தோம். எந்தவித சிக்கலுமில்லை. ஆனால் 2021-லிருந்து எங்களுக்கான சர்வீஸ் ரோட்டை மறித்துவிட்டு, கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போதுள்ள நிறுவனம் 32 ஆண்டு குத்தகைக்கு இந்த சுங்கச்சாவடியை எடுத்துள்ளார்கள். மக்கள் பணத்தை சுரண்டுகின்ற நிறுவனமாக இவர்கள் உள்ளனர். உள்ளூர் அமைச்சர்கள் தலையிட்டால், உள்ளூர் வாகனங்களுக்கு நாங்கள் கட்டண விலக்கு அளித்துள்ளோம் எனக் கூறிவிட்டு மீண்டும் இவர்களது வேலையைத் தொடங்கிவிடுகிறார்கள். இதன் காரணமாக இங்கு அடிக்கடி போக்குவரத்து சிக்கல் உண்டாகிறது. ஆகையால் உடனடியாக இந்த இடத்திலிருந்து சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும்" என்றார்.
குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்கள்: இதுதொடர்பாக வாகன ஓட்டுநர் பாலு கூறுகையில், "கப்பலூர் சுங்கச்சாவடிக்கும், எங்களது வாகன நிறுத்தகத்திற்கும் 100 மீட்டர் இடைவெளிதான் உள்ளது. ஆனால் எங்களிடம் சுங்கக் கட்டணம் வசூல் செய்கின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடியே சட்டத்திற்கு புறம்பாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. 60 கி.மீ. தொலைவில் அமைய வேண்டிய சுங்கச்சாவடி வெறும் 45 கிலோ மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பிரச்சனை ஏற்படும்போதேல்லாம் குண்டர்களை வைத்து எங்களிடம் பஞ்சாயத்து செய்கிறார்கள்.
12 ஆண்டுகளாக எங்கே சென்றார்கள்?: தற்போது ஆதார் அடையாளத்தை காண்பித்து செல்லலாம் என கூறியுள்ளார்கள். ஆனால் எங்களுக்கு இந்த சுங்கச்சாவடியை முழுவதுமாக இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த பிரச்சனையில் அரசியல் கட்சித் தலைவர்களும்கூட ஒப்புக்குதான் செயல்படுகிறார்கள். பொதுமக்கள் இந்த பிரச்சனையில் தீவிரம் காட்டத் துவங்கியதும் அரசியல்வாதிகள் தற்போது முனைப்புக் காட்டுகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாக இவர்கள் எங்கே சென்றார்கள்? உள்ளூர் மக்கள் கட்டணமின்றி செல்லலாம் எனக் கூறிவிட்டு தற்போது அனைவருக்கும் ஓராண்டு கட்டணம் செலுத்தக்கோரி வக்கீல் நோட்டீல் அனுப்பியுள்ளது சுங்கச்சாவடி நிர்வாகம். வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் பணம் கட்டச் சொல்லி அதில் அறிவுறுத்தியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோயம்பேடு - ஆவடி மெட்ரோ திட்டம்: ரூ.80.48 லட்சத்துக்கு கையெழுத்தான ஒப்பந்தம்!