சென்னை: எண்ணூரில் தொடர்ந்து ஒரு வார காலமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதைக் கண்டித்தும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தைக் கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து ஒரு வார காலமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியோர் மிகுந்த சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மின் வெட்டைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், எண்ணூர் நெடுஞ்சாலை பாலத்தின் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் வெட்டு குறித்து மின்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் மற்றும் மின் துறை உதவி பொறியாளர் புன்னியகோட்டி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, இனிமேல் மின் வெட்டு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: +1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.. - TN 11th Public Exam Result