சென்னை: இந்தியாவில் உள்ள கால்நடை மருத்துவம் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான கருத்தரங்கு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவம் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த பயிற்சி அரங்கில் கால்நடை ஆராய்ச்சி, சிகிச்சை அனுபவங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர். அதில் சிறந்த கல்லூரிகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கலந்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறை செயல்படுகிறது. குறைந்த செலவிலான உபகரணங்கள் தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதன் மூலம் நிறைய தகவல்கள சேகரிக்கப்படும்.
அவற்றை செயற்கை நுண்ணறிவு மூலமாக பல ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு பயன்படும். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த மேற்கொள்ள உள்ளோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 295 கல்லூரிகள், பேராசிரியர்கள் தவறான தகவலை கொடுத்ததாக தனியார் நிறுவனம் புகார் செய்திருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் உள்ள வெளிப்படையான தகவல்களை கொண்டு அந்த நிறுவனம் புகார் அளித்திருந்தது. பொறியியல் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று செய்யும் ஆய்வுடன், ஆன்லைன் முறையில் ஆவணங்களை ஆய்வு செய்து தொடர்பான மென்பொருள் மேம்படுத்தப்படும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தால் மட்டுமே, இனிமேல் தவறு நடக்காமல் இருக்கும்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநரை நேற்று நேரில் சந்தித்து, விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். உயர்கல்வித் துறையும் விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறது. அந்த குழுவிடம் அனைத்து தகவல்களையும் கொடுத்திருக்கின்றோம். இனிமேல் இதுதொடர்பான தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சிண்டிகேட் குழுவில், இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாதித்தோம். ஒரு ஆசிரியர் இரண்டு கல்லூரியில் பணியாற்றியதாக தகவல் இருக்கிறது. இதில் கல்லூரி மீது தவறா, ஆசிரியர் மீது தவறா என்று விசாரணை செய்யப்பட வேண்டி இருக்கின்றது.
எனவே தவறு செய்த கல்லூரிகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த ஆசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பணியாற்றுவதில் இருந்து நிரந்தர தடை விதிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்" என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்