சென்னை: தானா சேர்ந்த கூட்டம், பத்து தல, தங்கலான், மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்து, முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஞானவேல் ராஜா. இவரது மனைவி மேகா. இவர்கள் தி.நகர் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஞானவேல் ராஜா மனைவியின் மேகாவிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது, மேகாவிற்கு அதிகப்படியான பரிசுப் பொருட்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதில், இரண்டு பரிசுப் பொருட்களில் வந்த தங்க நெக்லஸ் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஞானவேல் ராஜா வீட்டில் 4 வருடமாக பணிபுரிந்து வந்த பணிப்பெண் லட்சுமி என்பவரிடம் விசாரித்துள்ளார். அவர் சரிவர பதில் சொல்லாமல் இருந்து வந்த நிலையில், 14ஆம் தேதியிலிருந்து அவர் வேலைக்கு வராமல் நின்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஞானவேல் ராஜா, தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, நேற்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் லட்சுமி என்பவரின் வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்பொழுது லட்சுமி, தான் இந்த நகைகளை திருடவில்லை என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று லட்சுமி வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அவரின் குடும்பத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாம்பலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.