கோவை: கோவை மாவட்டம் கோட்டம்பட்டியில் ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் பல்வேறு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்கள், ஆய்வக வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. கட்டணம் செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் மாணவர்களின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், "2022 - 23ஆம் ஆண்டுக்கான பள்ளி கட்டணமாக, புத்தகத்திற்கு என 11 ஆயிரம் ரூபாய் ஆண்டின் தொடக்கத்தில் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த கல்வி ஆண்டில் கல்வி கட்டணமாக புத்தகத்திற்கு என 26 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது" என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி, "தற்போது கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE) கீழ் படிக்கும் மாணவர்களை தனியாக ஒரு வகுப்பிலும் இதர மாணவர்களை வேறு வகுப்பிலும். பிரித்து அமர வைத்து பாடம் நடத்துவதாகவும், இதர மாணவர்களை மட்டும் தனியாக ஆய்வகங்களுக்கு அழைத்து செல்கின்றனர்" என பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம், இந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் DEO அலுவலகம் பொள்ளாச்சியில் இருந்து தற்போது கோவை நகருக்குள் மாற்றப்பட்டுவிட்டால் புகார்களை தெரிவிக்க நீண்ட தூரம் வர வேண்டி உள்ளதாக கூறி DEO அலுவலகத்தை மீண்டும் பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்க்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிரான வழக்கு: ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!