சென்னை: அண்மைக் காலமாகத் தமிழகத்தையும், தமிழர்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து புகழ்ந்தும் பாராட்டியும் வருகிறார். இந்தியாவில், பல மாநிலங்கள், பல கலாச்சாரம் என்று இருந்தாலும், தென் இந்தியாவில், தமிழகம் எப்போதும் ஒரு தன்னிச்சையாகச் செயல்படும் மாநிலமாகத் தான் இருந்து வருகிறது. மக்களின் மனம் என்னவென்று எல்லாரும் அறிவோம். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தான் என்ற பெருமை உலகு அறியும்.
அதேபோல் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு ஆபத்து என்றால், சுனாமி போல் பொங்கும் மனமும் நம்மிடம் தான் இருக்கிறது. தமிழகத்தைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் சமீப காலமாகப் பிரதமர் மோடி தொடர்ந்து புகழ்ந்து வருகிறார். எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பாஜகவின் பலம் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக தலைமையிடம் இருக்கிறது.
அதற்காகத் தமிழக மக்களிடம் பிரதமர் மோடி நானும் உங்களின் ஒருவன் தான் என மக்களின் மனதில், தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். மேலும், இந்தியாவில் எங்கு சென்றாலும், உலக நாடுகள் எங்குச் சென்றாலும் தமிழகத்தின் பெருமையைத் தொடர்ந்து மோடி பறைசாற்றி வருகிறார்.
தமிழகம், தமிழர்களைத் தொடர்ந்து புகழும் மோடி: இந்த ஆண்டு பிறந்தவுடனே பிரதமர் மோடி தமிழகத்துக்குத் தான் முதலாவதாகப் பறந்தார். கடந்த ஜனவரி 2ஆம் தேதி, திருச்சி சர்வதேச விமானநிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்றார் மோடி. அது ஓர் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் வெளிப்படையான அரசியல் நிகழ்வுகளைக் காண முடிந்தது.
அதைத் தொடர்ந்து, பொங்கல் தினத்தன்று திருவள்ளுவரை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார் பிரதமர். திருவள்ளுவர் தினத்தன்று, ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவரைக் காவி உடை மற்றும் தீருநீரு உடன் புகைப்படத்தை சமூக வலையத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்ததால், அன்றைய தினம் பேசுபொருளாக மாறியது. ஆனால் மோடியோ, அவர் சமூக வலையத்தில், தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் அமைந்துள்ள அவரது ஆழ்ந்த ஞானம், வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள், நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது. நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அவரது தொலைநோக்கு பார்வையை உறுதியுடன் நிறைவேற்றுவோம்
இவ்வாறு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியிருந்தார்.
மேலும், நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில், தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தைக் காண ஆர்வமாக இருக்கிறேன். சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாகத் தமிழ்நாடு திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன் என்றும் திருவள்ளுவர் முதல் வேலு நாச்சியார் வரை புகழாரம் செய்துள்ளார். மேலும் தொடர்ந்து, காசி தமிழ்ச்சங்கத்தில் தமிழகத்தைப் பற்றியும், செல்லும் இடத்திற்கெல்லாம், "யாதும் ஊரே! யாவரும் கேளீர் என்றும் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது."
பிரதமர் - முதல்வர் நெருக்கம்: மேலும், இன்றைய கேலோ இந்தியா போட்டி தொடக்க விழா மேடையில், நீண்ட நேரம், முதல்வரின் கையைப்பிடித்து, உரையாடினார். மேலும், துவக்க விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இருவரும் விழா அரங்கில் நுழைந்து போது திடீரென ஸ்டாலின் கால் இடறி நிலை தடுமாறினார். உடன் வந்த பிரதமர் மோடி கீழே விழாமல் ஸ்டாலினை கைதாங்கலாகத் தாங்கி பிடித்துக்கொண்டார். இது அங்கு பரப்பராப்பாக இருந்தாலும், விழா முடிந்த உடன், முதல்வரின் கையை இறுகப்பற்றி நீண்ட நேரம் உரையாடலாக நீடித்தது.
தமிழகத்தையும், தமிழர்களையும், தொடர்ந்து புகழ்ந்து வரும் பிரதமர் நரேந்திர மோடியால் தமிழகத்தில், பாஜக-வின் வாக்கு வங்கி உயருமா என்று நாம் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்!