தஞ்சாவூர்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கும்பகோணம் காந்தி பூங்கா நால்ரோடு சந்திப்பில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக - தேமுதிக கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல, இது மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணி. நாங்கள் என்றைக்கும் கூட்டணி தர்மத்தை மதித்து நடப்போம். எதிரணியில் 7 பேர் கொண்ட வானவில் கூட்டணியாக பார்ப்பதுக்கு அழகாக இருக்கலாம், இங்கே நமது கூட்டணியில் நான்கு பேர் மட்டும் இருந்தாலும், இது பலமான கூட்டணி.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணியே வெல்லும், மீண்டும் 2011 சரித்திரம் திரும்பும். அதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலே பிள்ளையார் சுழியாக அமையும். நால்வர் கூட்டணியான அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் என அனைத்துமே 4 எழுத்து. அது மட்டுமல்ல, வாக்குகள் எண்ணப்படும் தேதியும் ஜூன் 4ஆம் தேதி.
ஆகவே, தேர்தல் முடிவுகள் இந்தியாவை மட்டுமல்ல, உலகமே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அமையும். தேர்தல் நாளான 19ஆம் தேதி காலையிலேயே அனைவரும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து விடுங்கள். காரணம், தற்போது நடைபெறுவது திமுக ஆட்சி.
திருவாரூர்காரர்கள் சும்மாவே ஆடுவார்கள். தற்போது ஆட்சியில் உள்ளார்கள். அதிகார பலம், பணபலம், ரவுடிகள் பலம் என உள்ளது. ஆகவே, காலில் சலங்கை கட்டி ஆடுவார்கள். ஆனால் நாங்கள் பனங்காட்டு நரி. எனவே, இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.
தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி நினைவு வருகிறது, அவர்கள் பல நாட்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம், உண்ணாவிரதம் இருந்த போதெல்லாம், அவர்களை வந்து சந்திக்காதவர் தான் நம் முதலமைச்சர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக் கொண்டுள்ளனர். திமுக ஆட்சியில் பால் விலை, மின்சாரக் கட்டணம் உயர்ந்தது. கஞ்சா விற்பனையும், வறுமையும் அதிகரித்துள்ளது" என்று சாடினார்.
இதையும் படிங்க: “அவர் ஒரு புத்திசாலி” - விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகை நமீதா கூறியது என்ன?