திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது," வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படக்கூடிய 133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 64 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் 480 முதல் நிலை பொறுப்பாளர்கள், 500 தன்னார்வலர்களுக்கு ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநில பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
மாவட்டத்தில் அதிகம் பாதிப்படைய கூடிய பழவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளான வைரவன் குப்பம், திருப்பாலைவனம் , ஆண்டார் மடம் காட்டுப்பள்ளி மற்றும் பள்ளிபாளையம், ஏளாவூர் ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 660 தற்காலிக தங்குமிடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மழையால் பாதிப்படையக் கூடிய கால்நடைகளைப் பாதுகாக்க 64 தங்குமிடம் தயார் நிலையில் உள்ளது. இதில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 144 முதல் நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 42 மருத்துவ குழுக்கள் 76 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல் ,கண்ணன் தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளை 24 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது " என்றார்.
இதையும் படிங்க: கனமழை வந்தால் என்ன? - சென்னையில் நாளை முதல் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
தொடர்ந்து பேசிய அவர், மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கு நீர் இறைக்கும் மோட்டார்கள் ,ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகள் ,சவுக்கு கம்பங்கள், பொக்லைன், ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுக்கும் கருவிகள் ,கயிறு உள்ளிட்டவைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்பதற்காக மீனவர்களின் 110 படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பில் கருத்தில் கொண்டு பிரசவ தேதியை முன் அறிந்து அவர்களை மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் மழை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா கட்டுப்பாட்டு அறை எண்ணான -1077 / 044-27664177 /044-27666746 / வாட்சப் எண் 9444317862 /9498901077 ஆகிய எங்களுக்கு புகார் அளிக்கலாம்" என தெரிவித்தார்.