ஈரோடு: தமிழக அரசு கைத்தறி செநவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் என இரண்டு பயன்களுக்கான திட்டத்தினை 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 1 கோடியே 70 லட்சம் சேலைகளும், 1 கோடியே 65 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய தமிழக அரசு சுமார் 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6 விதமான வண்ணங்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
1 கோடியே 30 லட்சம் சேலை, 1 கோடியே 30 லட்சம் வேட்டிகள் விசைத்தறிகளிலும், தலா 35 ஆயிரம் வேட்டி மற்றும் சேலைகள் கைத்தறிகளிலும் உற்பத்தி செய்ய தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில், 238 விசைத்தறிகள் தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கம் வாயிலாக, 67 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி துவங்கப்பட்டு, டிசம்பர் இறுதியில் முடிக்கப்பட்டு ஜனவரியில் வழங்கப்படும்.
இந்த நிலையில், தமிழக அரசின் விலையில்லா இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் முதல் வாரத்தில் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்த தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர், “பள்ளிச்சீருடை உற்பத்தியில் 66 சதவீதம் மட்டுமே விசைத்தறியில் நெய்கிறோம்.
மீதமுள்ள 34 சதவீத சீருடைகளை கைத்தறியில் தான் உற்பத்தி செய்கிறோம். இதனால் பள்ளிச்சீருடை உற்பத்தி செய்வதில் விசைத்தறி நெசவாளர்களுக்கு எந்த பயனும் இல்லாத சூழல் உள்ளது. எனவே, அனைத்து பள்ளிச்சீருடைகளும் விசைத்தறியில் தான் உற்பத்தி செய்யப்படும் என தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கை 139-இல் கூறியதை நிறைவேற்ற வேண்டும். மேலும். கட்டம் கட்டங்களாக உள்ள டிசைனுக்கு பதிலாக, கோடு போட்ட டிசைனை பயன்படுத்தலாம்.
தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி மூலம் பல நெசவாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். கடந்த மூன்று மாத காலமாக ஜவுளி துறையில் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் காரணமாக, பல்லாயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும், பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தியை துவங்கினால், கடந்த வருடம் போல் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிப்பதற்கு ஏதுவாக அமையும்.
இது மட்டுமல்லாமல், பல லட்சம் நெசவாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்க உதவி செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால், விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி திட்டத்தை துவங்குவதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டும்” என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா? - Safety For Senior Citizens