தூத்துக்குடி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று(ஏப்.19) காலை 7:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி, 50.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தில் கிராம மக்கள் கிராமத்தின் அருகே உள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்த கிராமத்திற்கு திமுகவினருடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணனை காரை விட்டு இறங்கவிடாமல் இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்? இப்போது ஏன் வருகிறீர்கள்? பேச்சு வார்த்தை வேண்டாம். நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடத்தான் போகிறோம். பின்வாங்க மாட்டோம் எனக் கூறி அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "சிறிய வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லை" - ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024