நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மூன்றாவது முறையாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து விதிமுறை காரணமாக உரிய அனுமதி கிடைக்கவில்லை எனவும் இதற்கு காரணம் கூறப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்த பயணிகளின் கட்டணத்தை திரும்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தேதி அறிவிக்காமல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்படுகிறது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி 'செரியாபாணி' என்ற பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.
சில நாட்களே இயக்கப்பட்ட இக்கப்பல் வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தனியார் நிறுவனத்திடம் கப்பல் சேவையை மத்திய அரசு ஒப்படைத்த நிலையில் கடந்த 13, ஆம் தேதி கப்பல் சேவை தொடங்கும் என அந்த தனியார் நிறுவனம் அறிவித்தது.
'சிவகங்கை' என்ற மற்றொரு கப்பல் அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்டு சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் கிடைக்காத காரணத்தால் கப்பல் சேவை கடந்த 17ஆம் தேதி தொடங்கும் என அறிவித்தது. ஆனால், உரிய அனுமதி கிடைக்காத காரணத்தால் நாளை 19 ஆம் தேதி தொடங்கும் என தனியார் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தவிர்க்க முடியாத கப்பல் போக்குவரத்து விதிமுறைகளாலும், மோசமான வானிலை காரணமாகவும் கப்பலை இயக்க முடியவில்லை எனக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளதாக அந்த தனியார் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்தமானில் ஏற்கனவே இயக்கப்பட்ட பழைய கப்பலை சீர்செய்து நாகையில் இருந்து இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஏற்கனவே இயக்கப்பட்ட கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரி செய்தால் மட்டுமே கப்பல் போக்குவரத்து கழகம் உரிய அனுமதி வழங்கும் எனவும் கூறப்படுகிறது. 3 முறை கப்பல் போக்குவரத்து தேதி மாற்றம் செய்யப்பட்டு தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் இயக்கும் அனுமதி மட்டுமே பெற்றிருந்த சிவகங்கை கப்பலுக்கு வணிக கடல் துறையின் சர்வதேச பதிவு எண் கிடைக்காத காரணத்தால் ஏற்கனவே, 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து சேவை அறிவிப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர், தலைமை செயல் அலுவலர் செல்வராஜ் நாகை துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகே, கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்' என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 3 வது முறையாக கப்பல் போக்குவரத்து சேவை ரத்தாகி உள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: “2047ல் இந்தியர்களை நிலவில் இறக்கி மீண்டும் கொண்டுவர திட்டம்” - ஆசீர் பாக்கியராஜ் தகவல்! - IPRC DIRECTOR ASIR PACKIARAJ