திருச்சிராப்பள்ளி: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்திருந்த நிலையில், ஈவெரா, அண்ணா, எம்ஜிஆர்-க்கு அடுத்தபடியாக, தமிழக அரசியலின் மூன்றெழுத்து வாரிசே என தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் திருச்சியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) எனும் கட்சியைத் தொடங்கினார். இதனையடுத்து, இக்கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக விஜய் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை நடிகர் விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். மேலும், தவெக-வின் முதல் மாநில மாநாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் விஜய் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரினார். இதற்கு விழுப்புரம் காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்தது. இருப்பினும், மாநாடு தேதியில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிட்டார்.
இதையும் படிங்க: 19 வயதில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா; நடுவராக பங்கேற்ற ’லெஜண்ட்’ பட நடிகை!
இத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு வரவேற்பு அளிக்கும் விதமாக, த.வெ.க தொண்டர்கள், விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி ஆர்.கே.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டரில், ஈவெரா, அண்ணா, எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் புகைப்படம் இருப்பது போன்று அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், "தமிழக அரசியலில் மூன்றெழுத்தின் (ஈ.வெ.ரா, அண்ணா, எம்.ஜி.ஆர்) அடுத்த அரசியல் வாரிசே.. 2024-இல் எழுச்சி மாநாடு 2026-இல் தமிழ்நாடு" என்ற வாக்கியங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.