கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த 9 பேர் பல மாதங்களுக்கு பின்னர், இன்று (பிப்.23) கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை மகளிர் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரன்ஸிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு பின்பு இன்று 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில், கடந்த 2021ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் கூடுதல் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்களைக் கேட்டு 9 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில், இன்று 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.