கோயம்புத்தூர்: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியிலிருந்து ஆனைமலை, நெகமம் என பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் 'கள்' இறக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். அதைத் தடுத்து நிறுத்திக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்தற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று ஜூன் 22ஆம் தேதி நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத் தலைவர் பாபு தலைமையில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி பாலசுப்ரமணியம் காவலர்கள் முன்னே தற்கொலைக்கு முற்பட்டார். இதையடுத்து நிறுத்த காவல்துறையினர் முயற்சி செய்தபோது விவசாயிகள் மற்றும் காவல் துறையினர்க்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து நாராயணசாமி நாயுடு விவசாயச் சங்கத் தலைவர் ஏ.எஸ்.பாபு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "2009ஆம் ஆண்டிலிருந்து கள் இறக்க அனுமதி கோரும் விவசாயிகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. கள்ளச்சாராயம், டாஸ்மாக் உடன் தயவு செய்து கள் பானத்தை ஒப்பிட வேண்டாம். கள் மருத்துவ குணம் நிறைந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். இனி எந்த காரணத்தைக் கொண்டும் கள் இறக்குவதை நிறுத்தப்போவதில்லை. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பீகார் என மாவட்டங்களில் கள்ளுக்கு அனுமதி இருக்கும் போது ஏன் தமிழகத்தில் இதை நடைமுறைப் படுத்தக்கூடாது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்.. சிறுவன் கையில் பற்றிய தீ